சோதனை

>> Tuesday, December 29, 2009

தொலைக்காட்சியில் ஸ்பைடர்மேன் அடுக்கு மாடிக்கட்டிடத்தில் எரியும் நெருப்புக்குள் பாய்ந்து சென்று குழந்தையை பத்திரமாக மீட்டெடுத்து வந்தான். நான் இவனுக்கு இரவுணவை ஊட்டிக்கொண்டிருந்தேன். அவனது கவனத்தைப் பெயர்த்து ஒவ்வொரு கவளத்தையும் செலுத்தவேண்டியிருந்தது. இரண்டு வயதான இவன் சொன்னான், "நான் ஸ்பைடர்மேன்"."சண்டை போடுவேன்".


சராசரியாக இருப்பது அயற்சியாக இருக்கிறது; அலுப்பைத் தருகிறது. மற்றவர்களை விட வேறுபடுவதும், மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பாய் இருப்பதும் மனித உயிரின் விருப்பமாக இருக்கிறது. இதை வாழ்வதற்கான அடிப்படை இயற்கையின் தேர்வின் (Natural Selection) ஒரு வழி என்று சொல்கிறது தற்போதைய புரிதல். இப்படியான உயிரின அடிப்படை தவிர மனிதன் உருவாக்கும் ஆன்மீக காரணங்கள் ஏதோஒன்று இதற்குக் காரணமாக இருக்கமுடியுமா? தன்னைப் பலப்படுத்திக்கொள்ளுதலையும், விரிவாக்கிக்கொள்தலையும் உயிரின அடிப்படைக்காக மட்டுமே மனிதன் செய்கிறானா? அல்லது அதற்கு ஏதேனும் ஆன்மீக வழியிலான தூண்டுதல் இருக்க முடியுமா? ஒருபுறம் மனிதன் தன்னை பிற உயிர்த்தொகுதியினின்று வேறுபடுத்திக்காட்ட (போலியான) மதரீதியான முனைப்பு ஒன்றைக்கொண்டவன். நவீன மனிதன் இம்முனைப்பை கூடுதலாகக் கொண்டவனாக இருக்கிறான் இன்று நினைக்கிறேன். முன்னெப்போதையும் விட மனிதனிடம் இம்முனைப்பு இப்போது வலிமையடைந்துவருகிறது. இறைவனின் அல்லது அறிவின் மிக அருகிலான இருப்பு தன்னுடையது என்று மதரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் மனிதன் முன்னெப்போதையும் விட இப்போது நம்புகிறான். மதமும் அறிவியலும் இணையும் முக்கியமான புள்ளி இந்த நம்பிக்கைதான் என்று நினைக்கிறேன்.


இது வேறு மாதிரியாகவும் விரியலாம். கொஞ்சம் யோசிக்கும் யாருக்கும் இந்த வாழ்க்கை வெறும் முட்டாள்தனமும் அச்சமும் கொண்ட வெறும் நித்திய சுழற்சி என்பது புரியக்கூடியதுதான். இது தரும் உறுத்தலுக்கு பதிலளிக்கும் முகமாக மனிதனை குறிப்பாக தன்னை மேம்பட்டவனாக நம்பச்செய்ய வேண்டியது ஒரு எளிமையான உத்தி. நம்பிக்கை என்பது அனுவத்துக்கான எளிய, போலியான மாற்று. காக்கைப் பொன். மனிதனை கடவுளின் சிறப்பான தேர்வாக, அத்தேர்வினிலும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக தமது சாதி/ குலம் இவைகளை நம்புவதும், முடிந்தால் அவர்களில் சிறந்தவனாக தன்னை நம்புவதும் ஒரு எளிய வழிதானே.

அல்லது நிஜமாகவே இந்த நித்திய சுழற்சி அயற்சியைத் தந்திருக்கலாம். போலிகளால் தன்னை நிரப்பிக்கொள்ள விரும்பாது அருவருக்கலாம். அது நேர்மையான மனதால் பிரதிபலிக்கப்படும் போது பெரிய கனவுகள் விரிகின்றன. பெரிய மாற்றங்கள், சாதனைகளை மனம் வேண்டுகிறது. மக்கள் விடுதலையை, சமத்துவத்தை எல்லோருக்குமான நல்வாழ்வை விழைகிறது.

0 comments:

Post a Comment

About This Blog

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP